கடந்த 12.05.2012 அன்று கர்ணனின் வில்லிலிருந்து புறப்பட்ட நாகாஸ்திரத்திலிருந்து
அர்ச்சுனனைக் காக்க தேரை பூமியினுள் அழுத்தி தக்க தருணத்தில் அர்ச்சுனனின் உயிர்
காத்த கிருஸ்ண பரமாத்மாவைப் போன்று பொருளாதார வீழ்ச்சி எனும்
நாகாஸ்த்திரத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற தனது கணிணி பொத்தான்களை அழுத்தி
அழுத்தி இந்தியத் திருநாட்டை காக்க முயன்ற கிருஸ்ண பரமாத்மா ஒருவர் எழுதிய
கட்டுரையைப் படித்தேன். படித்து முடித்ததும் கண்களின் ஓரத்தில் கண்ணீர் முட்டிக்
கொண்டு நின்றது. தேசத்தின் மீது என்னவொரு பாசம்? நாடே
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”
என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த சூழ்நிலையில் யூகே(UK)
விலிருந்தாலும் தாய்நாட்டை மறவாது அதன் மீது அக்கறை செலுத்தக் கூடிய இந்திய
தேசத்தின் வருங்கால நிதியமைச்சராகும் தகுதி கொண்ட அந்த பொருளாதார ’மேதை’
யாராக இருக்கும் ?..
அவர் வேறு யாருமல்ல!.
நமது கிழக்கு பதிப்பகம் பத்ரிசேஷாத்ரி அவர்கள் தான்.அப்படி என்ன
யாருக்குமில்லாத தேச பக்தி அவருக்கு என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இதோ அவர்
எழுதிய அந்தப் பதிவு “சுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து”. இந்தியாவின் தலைக்கு வந்த
ஆபத்தை தலைப்பாகையோடு போகச் செய்ய இந்த கிருஸ்ண பரமாத்மா அப்படி என்ன தான் முயற்சி
செய்திருக்கிறார் என்று இனி பார்க்கலாம்.
முதலில்
நமது பொருளாதார ’மேதை’க்கு நாம் நன்றி தெரிவிக்க
வேண்டும். காரணம், காலங்காலமாக முதலாளிகள் தொழில்
நடத்துவதே தொழிலாளிகளின் வேலைவாய்ப்பிற்காகத் தான் என்கிற வாதத்தை தனது
கட்டுரையின் முதல் வரியிலேயே கிழித்து குப்பையில் போட்டுள்ளார். தொழில்துறை
முதலாளிகள் இலாபம் சம்பாதிப்பதற்காகவே நிறுவனங்களை நடத்துகிறார்கள் என்று ஒரு முதலாளியாய்
ஒப்ப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
கட்டுரை
முழுவதும் ஒரு சிறு குழந்தைக்கு சொல்லித் தரும் அக்கறையோடு தனித் தனியாக
ஒவ்வொன்றையும் உதாரணத்தோடு விளக்கியிருக்கிறார் பத்ரி. முதலில் இந்தியாவில் சென்ற
ஆண்டு தொழில்துறை உற்பத்தி குறைந்ததற்கான காரணங்களைப்பற்றி அலசுகிறார். பின்னர்
அந்த காரணங்களை அக்கக்காக பிரித்து மேய்ந்து அதனை கணிவுடன் விளக்குகிறார்.சரியான
முடிவு எடுக்கத்தெரியாத ரிசர்வ் வங்கியையும் இந்திய அரசையும் உரிமையோடு கடிந்து
கொள்கிறார். அடுத்ததாக விவசாயிகளின் நிலை குறித்து மிகக் கவலையுடன் மோவாயை தடவிக்
கொண்டே அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்தும் தீவிரமாக சிந்தித்து
எழுதியுள்ளார். இதுவரை இந்த அரசாங்கம் இப்பிரச்சனையில் என்ன செய்திருக்க வேண்டும்?, இனி என்ன செய்ய வேண்டும்? என்பதையும் விளக்கியிருக்கிறார் பத்ரி.
சந்தையின்
தேவைக் குறைவும், முதலாளிகளின் இலாபக் குறைவும்
தான் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று ’கண்டுபிடித்த’
கையோடு அதன் காரணத்தையும் அலசி ஆராய்ந்திருக்கிறார். சுய ஒப்புதல் வாக்குமூலத்தோடு
தனது கட்டுரையை ஆரம்பித்த பத்ரி, கட்டுரை நெடுகிலும்
தனது பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே செல்கிறார். எடுத்த எடுப்பிலேயே
உள்நாட்டு நுகர்வுக்கு பொருள் தயாரிக்கும் முதலாளிகள் இந்தியாவில் குறைவான இலாபம்
மட்டுமே ஈட்ட முடிகின்றது என்ற புளுகை சத்தமில்லாமல் உதிர்த்து விட்டிருக்கிறார்.
பால்
பாக்கெட்டிலிருந்து மருந்து மாத்திரை வரைக்கும் முதலாளிகள் அடிக்கும் கொள்ளையையே
குறைவான இலாபம் என்கிறார் பத்ரி. பத்ரியின் அளவு கோலின் படி இன்னும் அதிக
இலாபத்திற்கு முதலாளிகள் விற்பனை செய்ய ஆரம்பித்தால்... ? எண்ணிப் பார்க்கும் போதே கிலி ஏற்படுகிறது.
அடுத்தது உள்நாட்டில் நுகர்வு குறைந்தது பற்றி அலசுகிறார். அதனை சரிகட்ட அரசு என்ன
செய்திருக்க வேண்டும் என்றும் சில தீர்வுகளை கறாராக நம் முன் வைக்கிறார்.
இந்திய
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டது தான் இங்கிருக்கும் சந்தையின்
தேக்க நிலைக்கு காரணம் என்று கூறி ”ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை
குறைத்தால் தான் மக்கள் கடன் அட்டையில் பொருள்களை வாங்க முன் வருவார்கள். அப்போது
தான் சந்தையின் தேவை அதிகரிக்கும். முதலாளிகள் பொருளுற்பத்தி செய்வார்கள்.
தொழில்துறை முன்னேறும்” என்று அடுத்த தேங்காயை உடைக்கிறார்
பத்ரி.
தனக்கு
தேவையோ தேவையில்லையோ, காசு கையில் இருக்கிறதோ
இல்லையோ, கடன் வாங்கியாவது ஷாப்பிங்
செய்யவேண்டும் என்ற நுகர்வு கலாச்சார மனநோயால் (‘அப்ளூயன்சா’)
பாதிக்கப்பட்டிருக்கிற 80 சதவீத நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அவர்களை ஒட்டு
மொத்தமாக உறிஞ்சிக் குடிப்பதற்கு முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்து பத்ரியும்
துடிக்கிறார். சும்மாவா தேசத்தின் பொருளாதார வளர்ச்சியாயிற்றே!! தேசபக்தி என்று
வந்து விட்டால் பத்ரியை யாராலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது -ஆமாம்.
பத்ரியை
யாரும் தவறாக எண்ணக் கூடாது. நடுத்தரவர்க்கத்தின் நுகர்வுக்கு ஆதரவாக வட்டியை
குறைக்கச் சொன்னது கூட உழைக்கும் மக்களின் நலனுக்காகத்தான் என்பதை தனது
கட்டுரையில் பின்வருமாறு கூறுவதன் மூலம் நிரூபிக்கிறார் !
“ கடனுக்கான வட்டி குறைந்தால், பணத்தை கடனாக வாங்கிச் செலவழிக்கப் பலர்
நினைப்பார்கள். அப்போது தான் டிமாண்ட் அதிகமாகும், விற்பனை
அதிகமாகும், தொழில்துறை அதிக உற்பத்தியைச்
செய்யும். அவர்களுக்குக் கிடைக்கும் கடனுக்கான வட்டியும் குறைவாகவே இருக்கும், எனவே தொழில்துறை இலாபம் அதிகரிக்கும். தொழில்துறை
இலாபம் அதிகரித்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பல இளைஞர்களுக்கும் வேலை
கிடைக்கும், மாத வருமானம் கிடைக்கும்.”
ஆக
திருவாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் நோக்கம் எல்லாம் பல இளைஞர்களுக்கு மாத
வருமானம் கிடைக்கச் செய்வதேயாகும் !. தலையை சுற்றி மூக்கைத் தொடுவதைப் பற்றி
கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆனால் இது அதுவல்ல.
இது கவட்டைக்குள் புகுந்து மூக்கை தொடும் அதைவிட எளிய முறை! தொழில் துறை வளர்ச்சி, தேசபக்தி என்ற வகையில் இதையும் நாம் ஆதரித்தே ஆக வேண்டும்.
பத்ரியின்
மற்றுமொரு அரிய கண்டுபிடிப்பை கட்டுரையின் மற்றொரு பகுதியில் இருந்து நீங்கள்
அறிந்து கொள்ளலாம். அது என்னவென்றால் தொழில்துறையில் முதலாளிகளுக்கு இலாபம்
அதிகரித்தால் வேலை வாய்ப்பும் மாத வருமானமும் பெருகுமாம். எந்த ஊரில் முதலாளிகள்
இலாபத்திலிருந்து சம்பளம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தொழிலாளர்களின்
சம்பளத்தை அடக்கவிலையில் சேர்த்து அதற்கு மேல் (30 – 300 சதவீத)இலாபம்
வைத்து சுரண்டுகிறார்கள் என்பது தான் உண்மை.
தொடர்ந்து
தனது கட்டுரையில் பல பொருளாதார வியாக்கியானங்களை பொழிந்து விட்டு அடுத்ததாக பண
வீக்கத்தைப் பற்றி அலசுகிறார். பணவீக்கத்திற்கான முக்கிய காரணங்களாக உற்பத்தி
குறைவு, பெட்ரோல் விலை அதிகரிப்பு, அரசின் செயலற்ற தன்மை மற்றும் மானியம் என்ற
பெயரில் மக்களுக்கு நிறைய பணத்தைக் கொடுத்தல் ஆகியவற்றை முன் வைக்கிறார் நம்ம
பத்ஸ்.
உற்பத்தி
குறைவிற்கான காரணம் பற்றி ஏற்கனவே வியாக்கியானம் செய்து களைப்புற்றதால் அடுத்ததாக
கச்சா எண்ணெய் இறக்குமதியை ஒரு பிடி பிடிக்கிறார். மத்திய மாநில அரசுகளின் அதிக
வரி விதிப்பே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம். அரசு செய்ய வேண்டிய
முக்கியமான விசயம் என்னவென்றால் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும்.
அப்படிச் செய்தால் முதல் சில மாதங்களுக்கு நட்டம் ஏற்பட்டாலும் பெட்ரோல் டீசல், புழக்கம் அதிகரித்து அதன் மூலம் தொழில்துறை
பெருகி அதன் மூலம் அரசிற்கு வேறு விதமாக வருமானம் வந்து சேரும். எனவே பெட்ரோல்
டீசல் வரியை குறைக்க வேண்டும் என்பது அவரின் அடுத்த வாதம்.
நாடே
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. வரி குறைப்பின்
மூலம் தொழில் துறை எப்படி வளரும் என்பது குறித்து சிந்தித்து கணிணி பொத்தான்களில் ’தொப்’பியிருப்பது
தான் பத்ரியின் சிறப்பு. ஆனால் ஒரு சின்ன நெருடல். பெட்ரோல் டீசல் வரியைக்
குறைத்தால் அதன் மூலம் தொழில் வளம் பெருகி முதலாளிகள் போடும் பிச்சையில் நாடு
முன்னேறும் என்ற கவட்டை வழி மூக்கு தொடும் பாதையை எல்லாம் சிந்திக்கத் தெரிந்த
பத்ரிக்கு எண்ணெய் நிறுவனங்களை ரிலையன்ஸ்,
டாட்டா போன்ற கொள்ளையர்களிடமிருந்து பறித்தெடுத்து அரசே நடத்தினால் மேலும் கனிசமான
அளவுக்கு விலை குறையுமே” என்கிற சிந்தனை ஏன் வரவில்லை ?
இந்த
தேசத்தின் முதுகெலும்பான விவசாயத்தின் மீதும்,
விவசாயிகளின் மீதும் பத்ரி கொண்டுள்ள அன்பை அந்தக் கட்டுரையில் தொடர்ச்சியாக
காணலாம். கிட்டத்தட்ட A4 சீட்டில் 3 பக்க அளவிற்கு விவசாய நிலைகள்
மற்றும் அரசின் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் குறித்து கண்ணீர் வடித்துள்ளார்
இந்த முத(லை)லாளி
அந்த
3 பக்கத்தின் சாரத்தை பார்த்தோமானால் பத்ரியைப் பார்த்து ’3’
படத்தின் ’அந்தப்’
பாடலைத் தான் பாடத் தோன்றுகிறது. அதில் சாராம்சமாக அவர் சொல்லவருவது என்னவென்றால் ”விவசாயம்
என்பது நமது நாட்டில் நலிவடைந்து வருகிறது. அதற்கான காரணம், விவசாய கூலிகள் கிடப்பதில்லை. இன்னும் 18ஆம்
நூற்றாண்டு விவசாய முறையே இங்கு பின்பற்றப் படுகிறது. இந்த விவசாயத்துறையின்
கட்டுமானத்தையே மாற்ற வேண்டும். 1 ஏக்கர், 2
ஏக்கர் கொண்டு செய்யபடும் சிறு விவசாயம் என்பது இனி செல்லுபடியாகாது. பெரிய
நிலங்களில் நவீன முறைப்படி செய்யப்படும் விவசாயமே இனி செல்லுபடியாகும்”
என்பது தான்.
நமது
வருங்கால நிதியமைச்சர் (நம்ம பத்ரி) மறைமுகமாக கூறவருவது என்னவெனில் ”சிறு
சிறு விவசாய நிலங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக அழித்து விட்டு (அடிமாட்டு விலையில்
வாங்கி) பெரும் தனியார் விவசாயப் பண்ணைகளை உருவாக்கி விவசாயிகளை விவசாயக் கூலிகளாக, நகரத்திற்கு அடிமாட்டு கூலியில் வேலை செய்ய
இடம்பெயர்பவர்களாக, உரிமைகள்
ஏதுமற்றவர்களாக மாற்ற வேண்டும்” என்பது தான்.
விவசாயிகளுக்காக
நீலிக் கண்ணீர் வடிக்கும் பத்ரி உர விலையை ஏற்றும் தனியார் நிறுவனங்களைப் பற்றியோ
அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்று விவசாயிகள் வாயிலும் வயிற்றிலும்
அடிக்கும் நாசக்காரர்கள் பற்றியோ கிராமப்புறங்களில் நிலவும் கந்து வட்டி கொடுமை
பற்றியோ இவற்றின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் பற்றியோ, விவசாயம் செய்யவியலாமல் அடிமாட்டு விலைக்கு
நிலத்தை விற்று விட்டு மிகக்குறைவான கூலிக்கு நகரத்தை நோக்கி நகர்வதைப் பற்றியோ
சிந்திக்காமல் விட்டிருப்பது ஏன் ? தேசபக்தி
போதை ஏறினால் இவற்றையெல்லாம் அதாவது தேசத்தின் மக்களை எல்லாம் மறந்துவிடுவார்கள்
போலும்.
பத்ரியின்
மற்றொரு கண்டுபிடிப்பும் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. அதாவது 100 நாள்
வேலைத்திட்டம் சோம்பேறிகளை உருவாக்கும் திட்டம் என்பது தான் அது. அதாவது 100 நாள்
வேலைத் திட்டத்தின் கீழ் இந்த அரசாங்கம் மக்களுக்கு இங்கிருக்கும் மண்ணை வெட்டி
அங்கே கொட்டுவது, பின்னர் அங்கிருக்கும் மண்ணை
வெட்டி இங்கே கொட்டுவது போன்ற சப்பை வேலைகளுக்கெல்லாம் காசு கொடுத்துக்
கொண்டிருக்கிறது. இப்படி உழைப்பில்லாமல் சம்பாதிக்கும் காசால் மக்கள் அனாவசியமாக
செலவழிக்கின்றனர். இதனாலும் பணவீக்கம் ஏறுகிறது என்று வருத்தப்படுகிறார் இந்தப்
பொருளாதாரப் ’பிலி’.
சிறு
விவசாயிகளை ஓட்டாண்டியாக்கி, அவர்களை நிலங்களை
அடிமாட்டு விலைக்கு விற்று ஓடச் செய்து விவசாயத்தை ஒட்டு மொத்தமாக தனியார் பண்ணைகள்
கையில் ஒப்படைக்கவே, இந்த 100 நாள்
வேலைத்திட்டம், மக்கள் விரோதியான காந்தியின்
பெயரில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையை அறியாமலிருந்தாலும், விவசாய கால்வாய் வெட்டுதல், தூர் வாருதல் மற்றும் கட்டுமானப் பணிகளை தனியார், பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்த முறையில்
கொடுக்காமல், 100 நாள் வேலைத்திட்டத்தின்
கீழ் வேலை செய்பவர்களிடம் கொடுக்கலாம் என்று கூட திருவாளர் பத்ரி பேச மறுக்கிறார்.
மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள் என்றும் உழைக்காமல் சம்பாதிக்கிறார்கள் என்றும்
எழுதும் பத்ரிக்கு தமது தொப்பையைப் பார்த்தாவது உழைக்காமல் கொழுத்துத் திரியும்
முதலாளிகள் பற்றி ஞாபகத்தில் வந்திருக்க வேண்டுமே? ஏன்
வரவில்லை என்றும் தெரியவில்லை.
இதில்
ஏழைகளுக்கு அரசு பொக்லைன் இயந்திரங்களை ஓட்ட கற்றுத்தரவேண்டும் என்றொரு
கோரிக்கையும் வைக்கிறார் பத்ரி. அங்கிருக்கும் மண்ணை வெட்டி இங்கே போட இங்கிருக்கும்
மண்ணை வெட்டி அங்கே போட எதற்கு பொக்லைன் இயந்திரங்கள் ?
சாராம்சமாக
பத்ரி கவட்டை புகுந்து கூறவருவது ,
”சிறு
விவசாயம் சாத்தியமற்றது. பெரும் தனியார் பண்ணைகளை உருவாக்கிவிட்டால் மட்டுமே
விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். 100 நாள் வேலைத்திட்டம் மக்களை
சோம்பேறியாக்குகிறது. அரசாங்கத்தின் பணம் விரையமாகிறது. அதனால் அதனை
நிறுத்திவிட்டு கிராமப்புற ஏழைகளை நகரத்தை நோக்கி அடிமாட்டுக் கூலிக்கு வேலைக்கு
அலைபவர்களாக மாற்ற வேண்டும்” என்பதே.
அடுத்தது
மறைமுக வரிகள் குறித்து ஸ்வாமிகளின் வியாக்கியானம் பற்றி பார்க்கலாம். மறைமுக
வரிகள் அதிகம் இருப்பதால், இரு சக்கர வாகனங்கள், நாற்சக்கர வாகனங்கள் விற்பனை குறைந்து விடும்.
அதனால் மறைமுக வரியை ரத்து செய்ய / குறைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் தொழில்
நிறுவனங்களுக்கு இலாபம் கிடைக்கும். இந்திய தொழில் வளர்ச்சி பெருகும் என்கிறார்
பத்ரி.
மறைமுக
வரிகள் மக்களை உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவைகளை வாங்க வக்கற்றவர்களாக
மாற்றுகிறது என்று நாம் வருத்தப்படுவதற்கும், முதலாளியின்
இலாபம் எவ்வாறு குறைக்கிறது என்பதைப் பற்றி பத்ரி வருத்தப்படுவதற்கும் உள்ள
வித்தியாசத்தை இங்கே பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
கட்டுரை
முழுவதும் முதலாளிகளின் இலாபத்திற்கு குறைவில்லாத ஒரு சூழ்நிலை இருக்க வேண்டிய
அவசியம் பற்றி கவலைப்படும் பத்ரி, தனது தூக்கத்திலும்
முதலாளிகளின் நன்மைக்காகவே கனவு காணும் காங்கிரசை கடைசியில் சாடியிருப்பது தான்
கட்டுரையில் நெருடலான விசயம். மாண்டேக் சிங் அலுவாலியா வகுத்துத் தந்த திட்டத்தை
இம்மி பிசகாமல் குஜராத்தில் நிறைவேற்றி வருகிறார் இவரது ஆதர்ச புருசன் நரேந்திர
மோடி. மோடியை நேசிக்கும் இவருக்கு மாண்டேக்சிங் அலுவாலியா மீது ஏன் வெறுப்பு
என்பதைக் கண்டுபிடிப்பதில் நமக்கு சிறிது சிரமம் இருக்கிறது என்றாலும், பகிரங்கமாக ஏழைகளுக்கு எதிராக அறிக்கை விட்டு
வரும் மாண்டேக் சிங் அலுவாலியாவை ஆதரிப்பது என்பது என் அப்பன் குதிருக்குள் இல்லை
என்ற தனது ஏகாதிபத்தியதாசத்தனம் பகிரங்கமாக வெளிவரும் என்ற பயத்தில் கூட அவ்வாறு செய்திருக்கலாம்
என்று ஒருவாராக புரிந்து கொள்ளலாம். தவிர முதலாளிகளின் கட்சியான காங்கிரசை பத்ரி
சாடியதற்கு காரணம், பாஜக மீதான பார்ப்பனப்
பாசம் தான் என்பது அவரது மற்ற கட்டுரைகளிலிருந்து தெரிகிறது. நரேந்திர மோடியின்
பெயர் குஜராத்
படுகொலைகளில் அடிபட்டாலும் அவர் குஜராத்தில் கொண்டு வந்திருக்கும் வளர்ச்சிப்
பணிகளைப் பாராட்டி மோடி
பிரதமராக பத்ரி ஆதரவு வழங்குவாராம் !. ஒரு வேளை தன் வீட்டின் இளங்கன்றை
துடிக்க துடிக்க அவித்துத் திண்றவனைக் கூட தொழில் வளர்ச்சியைப் பெருக்கியவன் என்ற
ஒரே தகுதிக்காக பிரதமராக்கி அழகு பார்க்கும் தேசபக்தி பத்ரிக்கு மட்டும் தான்
உண்டு போலும்.
இவ்வளவு
தீவிரமாக இந்திய பொருளாதார மந்த நிலை குறித்தும் பணவீக்கம் குறித்தும் விவசாயிகள்
நிலை குறித்தும் ’வருத்தப்பட்டு’ எழுதும் பத்ரிக்கு இதே
காங்கிரசு அரசு பாஜகவின் ஆதரவோடு மக்களின் வரிப்பணத்தை உலகமயம் , தனியார்மயம்,
தாராளமயக் கொள்கைகளின் கீழ் கொள்ளையடித்தது பற்றியும் அதனால் ஏற்பட்டுள்ள
பொருளாதார சீரழிவு குறித்தும், ஏழை மற்றும் நடுத்தர
மக்களின் வாழ்நிலை தாழ்ந்தது குறித்தும் எழுத மனம் வரவில்லை போலும்.
வங்கி
வட்டி விகிதத்திலிருந்து ரிசர்வ் வங்கியின் ஒவ்வொரு பொருளாதார நடவடிக்கை வரையிலும்
அனைத்தையும் விமர்சிக்கும் அளவிற்கு தகவல்களை திரட்டி வைத்திருக்கும்
பத்ரிக்கு
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கிங்ஃபிசர் விஜய் மால்யா, அம்பானி குடும்பம், டாட்டா, ஆதித்யா பிர்லா போன்ற தரகு முதலாளிகள் கடன்
வாங்கி விட்டு திரும்பத் தராமல் ஏப்பம் விட்ட சில இலட்சம் கோடி கடன்கள் குறித்து
எந்தத் தகவலும் கிடைக்காதது ஆச்சரியம் தான்.
ஒருவேளை
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன்கள் தேசிய பொருளாதார வளர்ச்சியின்
அறிகுறியாக இருக்குமோ ? அல்லது
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் விடுவதால்
அந்நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று அதன் மூலம் அரசாங்கத்திற்கு இன்னும் அதிக வருமானம்
வரும் என்ற அக்கரையினால் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரோ ?..
இந்திய
தரகு முதலாளிகளுக்கும் , அந்நிய
முதலீட்டாளர்களுக்கும் வரிவிலக்கு, மானியம்
என்ற பெயரில் ஆண்டு தோறும் பட்ஜெட்டில் 5 இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவதைப்
பற்றியோ, இருக்கும் ஆயுதங்களுக்கு
வெடிகுண்டோ தோட்டாவோ வாங்காமல் புதிது புதிதாக இயக்கத்தெரியாவிட்டாலும் வாங்கிக்
குவிக்கும் இராணுவத் தளவாடங்களுக்கு ஆண்டுதோறும் அரசு செலவழிக்கும் 2 இலட்சம் கோடி
ரூபாய் குறித்தோ, அடுக்கடுக்காக இந்திய கடல்
எல்லைப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் அணு உலைகளை நிறுவ போடப்பட்டிருக்கும் 25
இலட்சம் கோடி மதிப்பிலான அணுவுலைகள் வாங்கும் திட்டம் பற்றியோ மவுனம் சாதிப்பது
ஏன் ?.. இந்திய தேசிய பொருளாதார
வளர்ச்சியின் மீது காதல் கொண்டிருக்கும் அதே வேளையில், இத்தகைய மக்கள் விரோத செலவுகள் மீதும் கொண்ட
கள்ளக்காதல் தான் பத்ரியின் மவுனத்திற்கு காரணமா ?.
மண்ணெண்ணை, டீசல், சமையல்
எரிவாயு உருளை ஆகியவற்றிற்கு இந்த அரசாங்கம் வழங்கும் கொஞ்ச நஞ்ச மானியத்தையும்
பார்த்து பெருமூச்சு விடும் பத்ரிக்கு,
கிருஸ்ணா கோதாவரி
ஆற்றுப்படுகைகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு
போன்ற தேசிய வளங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்தது பற்றியும், NTPC என்னும் மத்திய அரசு
நிறுவனத்திற்கு கொள்ளை இலாபத்திற்கு அதே எரிவாயுவை ரிலையன்ஸ் விற்றது பற்றியும், அதே போல் இந்தியாவின் கனிம
வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சல்லீசான விலையில் அள்ளி அள்ளி தாரைவார்த்து
விட்டு அதே நிறுவனத்திடம் இருந்து அதிக விலை கொடுத்து உலோகங்களை வாங்குவது
பற்றியும் அவற்றால் அரசிற்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்புகளை பற்றியும் ஏனோ
மறந்து விட்டது போலும்.
பொருளாதாரத்தை
விளக்குகிறேன் பேர்வழி என்ற பெயரில் உழைப்பவர்களுக்கு எதிரான, உட்கார்ந்து தின்று கொழுக்கும் முதலாளிகளுக்கு
ஆதரவான கட்டுரைகளை எழுதிக் குவிக்கும் பத்ரியை கண்டிப்பாக நாம் இனம் காண வேண்டும்.
அக்கட்டுரையின் பின்னூட்டத்தில் இருக்கும் பல அம்பிகளின் வன்மமும், அதனை அறியாமல் அருமை பெருமை என்று பாராட்டும்
நடுத்தவரக்கத்தினர் சிலரையும் பார்த்த போது கண்டிப்பாக எழுத வேண்டிய அவசியத்தை
உணர்ந்ததாலேயே இந்த எதிர்வினை எழுதப்பட்டது.
அம்பி பத்ரி! இனியாவது
பொருளாதாரக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன் அதியமான் போன்றவர்களிடம் விவாதித்து
விட்டு எழுதுங்கள். எப்படி லின்க் போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்பதை அவர்
சொல்லித்தருவார். அதோடு கம்யூனிஸ்ட்டுகளை சமாளிக்க டிப்சும் கொடுப்பார்.